கோவிஷீல்டு தடுப்பூசியால் தங்களின் மகள்கள் இறந்துள்ளதாக இரண்டு பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக பிரிட்டனின் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா வேக்சின் எடுத்துக் கொண்ட சிலருக்கு ரத்த உறைதல் பிரச்சினை ஏற்படும் என்று பிரிட்டன் நீதிமன்றத்தில் அந்த நிறுவனமே ஒப்புக் கொண்டது. அதனைத்தொடர்ந்து கோவிஷீல்டு வேக்சினால் மரணங்கள் நடந்துள்ளதாக குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட தங்களது மகள்கள் இருவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக, தமிழ்நாட்டை சேர்ந்த வேணுகோபாலன் கோவிந்தன் மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த ரச்சனா கங்கு என்பவர்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்த பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை தற்போது விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மனுதாரர் தரப்பில், அரசு தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனைவரையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கட்டாயப்படுத்தியது என்று குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், “மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த கொரோனா தொற்றுக்கு தீர்வு தடுப்பூசி மட்டுமே என்று நம்பி போதுமான ஆதாரங்கள் இல்லாமல், அரசாங்கத்தாலும், அதன் அமைப்புகளாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் ஏற்படும் பக்க விளைவுகளை சமாளிக்க எந்த மருத்துவருக்கும் பயிற்சியளிக்கப்படவில்லை” என்றும் விமர்சித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த மத்திய அரசு, தடுப்பூசி செலுத்த யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியது. ஆனால் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் வழக்கை அடுத்தக்கட்ட விசாரணைக்காக நவம்பர் மாதம் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.
Read more ; மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..!! டாஸ்மாக் கடைகளில் வரப்போகும் அதிரடி மாற்றம்..!!