பரமக்குடி பகுதிகளில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தான் வேண்டும், அதிமுக கூட்டணி வேண்டாம்” என்று ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட வேண்டுமெனில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமாலையை நீட்டிக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அண்ணாமலையை வேறு பதவிக்கு மாற்ற பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவியுள்ளன.
அண்ணாமலைக்கு பதில் புதிய மாநில தலைவரை நியமிக்க பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. புதிய மாநில தலைவருக்கான போட்டியில் பாஜக எம்எல்ஏ-வான நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்களும் தலைவர் பதவிக்கு பரிசீலனை என தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியை உறுதிசெய்யும் வகையிலேயே மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றம் என கூறப்படுகிறது.

அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணன் “வேண்டும்.. வேண்டும்… அண்ணாமலை வேண்டும், வேண்டாம்.. வேண்டாம்.. அதிமுக கூட்டணி வேண்டாம்.. என்ற சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். இந்த சுவரொட்டி பாஜக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் பதவியில் ஒருவர் மூன்று ஆண்டுகள் மட்டுமே இருக்க முடியும். ஆனால், 2012 இல் கட்சியின் அரசியலமைப்பு திருத்தப்பட்டு, ஒருவர் அதிகபட்சமாக இரண்டு தொடர்ச்சியான பதவிக் காலங்களுக்கு, அதாவது மொத்தம் ஆறு ஆண்டுகள் வரை மாநில தலைவர் பதவியில் இருக்கலாம் என்று மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.