பாஜகவின் பாசிச நடவடிக்கைக்கு உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
.திருவள்ளூரில் நடைபெற்ற மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான ‘தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!’ கண்டனப் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்; தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி, தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் இருக்கிறது. இதைக் குறைக்கும் அபாயம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. பொதுவாக, மக்கள் தொகையை வைத்துதான் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. மக்கள் தொகை குறைவாக இருப்பதால், நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கையும் குறையும்.
தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்று தெரிகிறது. அதாவது, இனி தமிழ்நாட்டுக்கு 39 இல்லை, 31 எம்.பி.க்கள் தான். நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்,. தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். இது வெறும் உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பற்றிய கவலை மட்டுமல்ல. நம்முடைய மாநிலத்தின் உரிமை சார்ந்தது. இதை வைத்து அனைத்துக் கட்சி கூட்டத்தை நாம் கூட்டினோம். பா.ஜ.க., ஓரிரு உதிரிக்கட்சிகள் நீங்கலாக மற்ற கட்சிகள் அனைத்தும் வருகை தந்து நம்முடைய கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.
இது தமிழ்நாட்டின் பிரச்சினை மட்டுமல்ல, தென் மாநிலங்களின் பிரச்சினை என்பதால், இன்னும் சில மாநிலங்களும் பாதிக்கப்படும் என்று அனைவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். தென் மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாத பா.ஜ.க., வடமாநிலங்களில் பெறும் வெற்றியை வைத்தே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறது. அதுதான் சதி! தங்களுக்கு செல்வாக்கான மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு, தங்களை வளர்த்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். இதைத் தி.மு.க. தடுத்து நிறுத்தும். தென் மாநிலக் கட்சிகள் அனைத்தையும் சேர்த்துக் கொண்டு தடுப்போம்.
தொகுதி மறுசீரமைப்பில் பாதிக்கப்படவுள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்த்து, கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க இருக்கிறோம். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா, மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் இருக்கும் 29 கட்சிகளுக்கு நான் கடிதம் அனுப்பி இருக்கிறேன். பிற மாநில முதலமைச்சர்களுடன் நானே நேரடியாக இன்று காலை முதல் தொலைபேசியில் பேசி வருகிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று இந்தக் கருத்தை எடுத்துச் சொல்கிறார்கள். இதன் தொடர்ச்சியாகச் சென்னையில் பல்வேறு மாநிலக் கட்சிகள் கலந்துக் கொள்ளும் கூட்டத்தை மார்ச் 22-ஆம் நாள் நடத்த இருக்கிறோம். பாஜகவின் பாசிச நடவடிக்கைக்கு உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம் என்றார்.