500 ரூபாய் கடனை திரும்ப செலுத்தாததால் 40 வயது நபர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள கங்கா பிரசாத் காலணியை சார்ந்தவர்
பன்மலி ப்ரமணிக் வயது 40. இவர் தனது அண்டை வீட்டைச் சார்ந்த ப்ரொபிலா ராய் என்பவரிடம் 500 ரூபாய் கடனாக வாங்கி இருக்கிறார். இந்தத் தொகையை அவர் நீண்ட நாட்களாக திருப்பி செலுத்தவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக ராய் மற்றும் ப்ரமணிக் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினமான ஞாயிற்றுக்கிழமை மாலை ப்ரமணிக்கை தேடி அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அவர் அப்போது வீட்டிலில்லை.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள டீ கடைக்குச் சென்றபோது அங்கு அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்திருக்கிறார் ப்ரமணிக். அவரிடம் சென்று தனக்கு செலுத்த வேண்டிய 500 ரூபாயை திரும்ப கேட்டிருக்கிறார் ராய். இவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியிருக்கிறது. அப்போது, தான் வைத்திருந்த மூங்கில் குடையால் சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதில் பலமான அடி ஒன்று ப்ரமணிக் தலையில் விழுந்துள்ளது. இதில் மயக்கமடைந்த அவர் சுயநினைவிற்கு திரும்பினாலும் அடுத்த நாள் காலை ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மால்டா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்துள்ளனர். அவரை மால்டா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.