fbpx

யாரை காப்பாற்ற யாரை பலி கொடுப்பது..? வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்…! இயக்குனர் பா.ரஞ்சித்

வேங்கைவயல் வழக்கினை சிபிஐக்கு அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என இயக்குனர் பா.ரஞ்சித் வலியுறுத்தி உள்ளார்‌.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கடந்த 20ஆம் தேதியே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டதாகவும், அதில் மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. அம்மூன்று பேரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியது. இது திட்டமிட்டுச் செய்யப்படும் செயலாகத் தெரிகிறது. கடந்த இரண்டு வருடங்களாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத சி.பி.சி.ஐ.டி அவசரக்கதியில் ஏதோ ஒரு காரணத்திற்காகக் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை சரிவர நடைபெறவில்லை என்று தெரிவித்திருந்தார் என்பதையும் நினைவு கூறுகிறோம். வழக்கு சம்பந்தமாக இரண்டு வருடங்களாக சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை செல்லும் போக்கினை கடுமையாகக் கண்டித்து வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் குற்றவாளிகள் யார் என்று இனம் காணத் தெரியாத சி.பி.சி.ஐ.டி இன்று திடீரென்று குற்றவாளிகள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று அறிவித்திருப்பதன் பின்னணி என்னவென்று புரியாமல் இல்லை.

இரண்டு வருடங்களாக ஆழ்ந்த நித்திரையில் இருந்த தமிழக சி.பி.சி.ஐ.டி இன்றைக்குத் திடீரென்று விழித்திருப்பதைப் பார்க்கையில், இவர்கள் யாருக்காகப் பணி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுகிறது. உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் இத்தகைய சூழ்ச்சியைச் செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட தலித் மக்களின் கண்ணியத்தையும் மாண்பையும் இழிவுபடுத்தவும் அரசு துணிந்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நீதிமன்றம் இதனை ஏற்கக்கூடாது. மேலும், இந்த முடிவை தமிழக அரசும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இவ்வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுத்தரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

English Summary

Whom will be sacrificed to save whom? Vengaivayal case should be transferred to CBI

Vignesh

Next Post

ரஷ்யா - உக்ரைன் போர்; அடிபணிந்த புதின்!. டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்!. வெளியான அறிவிப்பு!

Sat Jan 25 , 2025
Russia - Ukraine war; Putin surrenders!. Ready to negotiate with Trump!. Announcement released!

You May Like