கர்நாடக மாநில பகுதியில் உள்ள பெங்களூரு அருகே உள்ள அமிர்தலியில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த டிசம்பர் 21ம் தேதி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது, கோவிலுக்குள் பூஜை செய்து கொண்டிருந்த பெண்ணிடம், ‘நீ கறுப்பாக இருக்கிறாய், குளித்த மாதிரி தெரியவில்லை’ என்று கூறி கோவில் அறங்காவலர் முனிகிருஷ்ணப்பா திட்டினார்.
அந்த பெண் பார்ப்பதற்கு வினோதமாக இருப்பதால் சாமி கும்பிட அனுமதிக்க முடியாது என்றும் கூறி தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, முனி கிருஷ்ணப்பா அவரை முடியைப் பிடித்து இழுத்து கோயிலுக்கு வெளியே தள்ளினார்.
இதை பற்றி வெளியில் பேசினால் கொலை செய்து விடுவதாக முனி கிருஷ்ணப்பா மிரட்டியதாக தெரிகிறது. இந்தக் காட்சிகள் அனைத்தும் கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கோயிலின் கருவறைக்குள் பெண் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகவும், அதன் காரணமாகவே அவர் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.