தமிழகத்தில் கிராமப்புறங்களில் இருக்கின்ற பல்வேறு குடும்பங்களில் இருக்கின்ற பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் வறுமையின் காரணமாக, கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு சென்று அங்கே வேலை பார்த்து, தங்களுடைய குடும்பங்களை கவனித்து வருகிறார்கள்.
அப்படி பிழைப்பு தேடி வெளியூருக்கு வரும் சிறுமிகள் மற்றும் பெண்களை குறி வைத்து, சில கயவர்கள் ஏமாற்றி, அவர்களுடைய வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள். இது போன்ற நபர்களை, கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது.
அந்த விதத்தில், கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சிபி (23) என்ற இளைஞர், திருப்பூர் போயம்பாளையம் பகுதியில், பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் சென்ற வருடம் தன்னுடன் வேலை பார்த்த 16 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று, அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது தொடர்பாக, வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருப்பூர் வடக்கு மகளிர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள், போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து, அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இது குறித்த வழக்கு விசாரணை, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டிருக்கிறது. அந்த இளைஞருக்கு 20 வருட கால சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த சிறுமியை கடத்திச் சென்றதற்காக, ஐந்து வருட கால சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25000 ரூபாய் இழப்பீடாக வழங்கவும், நீதிபதி பாலு தீர்ப்பு வழங்கினார்.