தெலங்கானாவின் நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள பீம்கல் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த சுதாகர் என்பவர், காவல் நிலைய வளாகத்திலேயே தீக்குளித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிறிய உணவகம் நடத்தி வரும் சுதாகர், தனது கடைக்கு வெளியே வாடிக்கையாளர்கள் அமருவதற்காக மேஜைகளை அமைத்திருந்தார். இதுதொடர்பாக அவருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்த நிலையில், காவல் நிலையத்திற்கு வருமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
காவல் நிலையத்திற்கு வந்த சிறிது நேரத்தில், சுதாகர் தன்னுடன் கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு, தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சுதாகர், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காவல் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: அடிக்கடி இந்தப் பழத்தை சாப்பிடுங்க.. இதய நோய் பற்றி இனி கவலைப்பட வேண்டாம்!



