ரூ.100 கோடி புகார் வழக்கு.. அன்பில் மகேஷுக்கு சிசிபி அனுப்பிய சம்மன்!

anbil mahesh

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத்தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்த வழக்கு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமாரிடம் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.


இதையடுத்து செப்டம்பர் 18ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சிசிபி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சென்னை தி.நகரைச் சேர்ந்த தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பி.டி. அரசகுமார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், கூடுதல் வகுப்பறைகள் அமைப்பதற்கான அனுமதி, கட்டிடத் திட்ட ஒப்புதல் உள்ளிட்ட அரசு அனுமதிகளை பெற்றுத்தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி செய்ததாக அந்தப் புகாரில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், திமுக செய்தித் தொடர்புக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரான பி.டி. அரசகுமார் கடந்த ஜூன் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களுடன் தொடர்புடைய இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கிடைத்த ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் வழக்கின் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றன.

அடுத்தகட்டமாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர் வாளாடி கார்த்திக் தொடர்புடைய 8 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். 20க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற இந்த சோதனை சுமார் 8 மணி நேரம் நடைபெற்றது.

சோதனையில் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், பள்ளி அங்கீகாரம் தொடர்பான பதிவுகள், மனுக்கள், காசோலைகள், ஹார்டு டிஸ்க்குகள், லேப்டாப்கள், 18 செல்போன்கள் மற்றும் ஒரு ஐபேட் உள்ளிட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் பி.டி. அரசகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அன்பில் மகேஷிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காகவே செப்டம்பர் 18ஆம் தேதி சிசிபி அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அன்பில் மகேஷிடம் நடைபெறும் விசாரணையில், தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் அரசு அனுமதிகள் தொடர்பான பணப் பரிவர்த்தனைகள், சம்பந்தப்பட்ட நபர்களுடனான தொடர்புகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து போலீசார் விசாரிக்க உள்ளனர். வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இந்த விசாரணையின் அடிப்படையில் அமைய உள்ளது.

Also Read: “உங்களுக்கு வாக்களித்ததே வேஸ்ட்”.. அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்; மதுரை கோயில் கும்பாபிஷேகத்தில் பரபரப்பு!

Saranya

Next Post

கும்பாபிஷேகத்துக்கு பிளக்ஸ் வைப்பதில் மோதல்..! கூலித் தொழிலாளியை துடிக்க துடிக்க கொன்ற கும்பல்..! தஞ்சையில் அதிர்ச்சி..!

Thu Sep 17 , 2026
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு பிளக்ஸ் போர்டு வைப்பதில் ஏற்பட்ட தகராறில், விவசாய தொழிலாளி ஒருவர் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாபநாசம் தாலுகா, சத்தியமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தளபதி (50). விவசாயக் கூலித் தொழிலாளியான இவரின் மகன் சேதுபதிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் பிரகாஷ் (28) என்பவருக்கும் இடையே, அப்பகுதியில் நடைபெற […]
Murder 2026 1

You May Like