இந்திய உணவு வகைகளில் சப்பாத்திக்கு முக்கிய இடம் உண்டு. கோதுமை மாவில் தயாரிக்கப்படும் சப்பாத்தி, பல வீடுகளில் அன்றாட உணவின் ஒரு பகுதியாக உள்ளது. மென்மையாகவும் நன்றாக உப்பிய நிலையிலும் இருக்கும் சப்பாத்தியை சாப்பிட பலரும் விரும்பினாலும், சில நேரங்களில் சப்பாத்தி கெட்டியாகவோ அல்லது சரியாக உப்பாமல் போவதோ உண்டு. இதற்கு மாவு பிசையும் முறையில் ஏற்படும் சில தவறுகளும் காரணமாக இருக்கலாம்.
சப்பாத்தி மாவை குறைந்தது 8 முதல் 10 நிமிடங்கள் வரை நன்றாக பிசைய வேண்டும். மாவை நன்கு பிசைவதன் மூலம் அதன் பதம் மென்மையாக மாறுவதுடன், சப்பாத்தியும் மென்மையாக கிடைக்க உதவும். மாவு பிசையும்போது மிகவும் குளிர்ந்த தண்ணீரை பயன்படுத்துவதை தவிர்த்து, வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தலாம்.
மாவை பிசைந்தவுடன் உடனடியாக சப்பாத்தி தேய்க்கத் தொடங்காமல், மாவை மூடி வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஓய்வெடுக்க விடுவது முக்கியம். இதனால் மாவு மென்மையாகி, சப்பாத்தியை எளிதாக தேய்க்க முடியும். மேலும், மாவை பிசையும்போது சிறிதளவு பால் சேர்ப்பதும் சப்பாத்தியை மென்மையாக வைத்திருக்க உதவும்.
சப்பாத்தியை தேய்க்கும்போதும் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். மாவை மிகவும் அழுத்தமாக தேய்க்காமல், மெதுவாகவும் சமமாகவும் தேய்க்க வேண்டும். குறிப்பாக, ஓரங்கள் அதிகமாக தடிமனாகவோ அல்லது அதிக மாவு படிந்ததாகவோ இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் சப்பாத்தி சீராக வேகும்.
சப்பாத்தியை சுடுவதற்கு முன்பு தோசைக்கல்லை நன்றாக சூடாக்க வேண்டும். கல் போதுமான அளவு சூடான பிறகே சப்பாத்தியை போட்டு சுட வேண்டும். அதே நேரத்தில், அதிக வெப்பத்தில் சுடுவதை தவிர்த்து, மிதமான தீயில் சப்பாத்தியை வேக வைப்பது நல்லது. இதனால் சப்பாத்தி நன்றாக வேகுவதுடன், சரியாக உப்புவதற்கும் வாய்ப்பு இருக்கும்.
எனவே, மாவை நன்றாக பிசைந்து, சிறிது நேரம் ஓய்வெடுக்க வைத்து, சரியான வெப்பநிலையில் சப்பாத்தியை சுடுவது போன்ற எளிய முறைகளை பின்பற்றினால், வீட்டிலேயே மென்மையான, உப்பிய சப்பாத்தியை தயாரிக்க முடியும்.
Also Read: பெண்களே உஷார்! இந்த 5 விஷயங்களை யாரிடமும் சொல்லாதீங்க… சாணக்கியர் கூறிய முக்கிய அறிவுரை..



