தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் மத்திய பா.ஜ.க. அரசு பார்க்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயல்வதாக மத்திய அரசை கண்டித்து, திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் தி.க.தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில் தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் மத்திய பா.ஜ.க. அரசு பார்க்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்; தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக்கூடிய ஒன்றிய பாஜக அரசு, கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தமிழ்ப் பண்பாட்டின் பெருமைக்குரிய இரும்பின் தொன்மை முடிவுகள் குறித்து ஒரு ‘ட்வீட்’ போடக்கூட பிரதமர் தொடங்கி பாஜக ஆட்சியினருக்கு மனம் வரவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க.வினரும் தங்கள் இன, மொழி உணர்வைப் பதவிக்காகத் தலைமையிடம் விற்றுவிட்டு, தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்கள்.
தரவுகள் ஏதுமில்லாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை முன்னிறுத்தி, |திராவிடப் பண்பாட்டு அடையாளமான சிந்துவெளி நாகரிகத்தை அழிக்க நினைக்கும் பா.ஜ.க., இதுவரை சரஸ்வதி நாகரிகத்தை எந்தவித அறிவியல் சோதனைகள் மூலமாகவும் நிரூபிக்கவில்லை. ஆனால், தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஒவ்வொன்றும் உலகத் தரத்திலான அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும் கூட அதனை ஏற்பதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசுக்கு மனது வரவில்லை. அந்தளவுக்குத் தமிழினத்தின் மீதான வெறுப்பு அந்தக் கட்சியின் கொள்கைகளில் ஊறிக் கிடக்கிறது.
Read More: அதிமுகவுடன் கூட்டணி சேருவதில் பிரச்னை இல்லை…! திருமாவளவன் கொடுத்த டுவிஸ்ட்…