கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சாலை வழியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வந்தடைந்தார். நேரடியாக பிணவறைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அனைவரையும் சந்தித்து நலம்விசாரித்தார். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, சிவசங்கர், பெரியகருப்பன், சுப்பிரமணியன், அன்பில் மகேஸ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் இருந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பணியில் இருக்கும் மருத்துவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். நள்ளிரவு தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு, கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரணமாக அறிவித்தார்.
அதேபோல சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விசாரணைக் குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.