தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்..
காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 4 என தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது.. விஜய் ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவைப்படுகிறது. தவெக ஆட்சி அமைய ஆதரவு கோரி தவெக சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று ஜூம் மீட்டிங் வழியாக உயர்மட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் எடுத்து கொண்ட முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதுபற்றி இன்று காலையில் அறிவிப்பதாக திருமாவளவன் கூறியிருந்தார். விசிகவின் நிலைபாடு குறித்து தமிழ்நாடே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த நிலையில் மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 4 மணி ஆகியும் விசிக சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் “என்ன சொல்ல போகிறாய்..”காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி” பாடல் வரிகளுடன் இணைய வாசிகள் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். தவெக பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலையில், விசிக எந்த நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே அதிகரித்துள்ளது.
Read more: Flash: தவெகவுக்கு ஆதரவு..? சி.வி.சண்முகம் தலைமையில் தனி ஆலோசனை.. 36 MLA-க்கள் பங்கேற்பு..?



