சினிமா திரையில் நாயகனாக வலம் வரும் நடிகர் விமல், தனது சொந்த ஊரில் காய்கறி விற்பனை செய்த சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. திருச்சி மாவட்டம் பண்ணங்கொம்பில் நடைபெற்ற வாரச் சந்தையில் அவர் காய்கறி கடையில் அமர்ந்து விற்பனை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
விமல் காய்கறிகளை விற்பனை செய்வதுடன், சந்தைக்கு வந்தவர்களை அழைக்கும் வகையில் கூவி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
நடிகர் விமலின் இந்த இயல்பான செயல் குறித்து ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, திரைத்துறையில் பிரபலமாக இருந்தாலும் சொந்த ஊரின் வாழ்க்கை முறையுடன் அவர் ஒன்றிணைந்திருப்பது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
விமலின் சினிமா பயணத்தைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நாயகனின் நண்பர் அல்லது கூட்டத்தில் இடம்பெறும் கதாபாத்திரம் என பெயரில்லாத வேடங்களில் சுமார் எட்டு ஆண்டுகள் பயணித்தார்.
பின்னர் 2008ஆம் ஆண்டு வெளியான ‘காஞ்சிவரம்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குறிப்பிடத்தக்க திருப்பத்தை சந்தித்தார். இதையடுத்து, இயக்குநர் பாண்டிராஜின் ‘பசங்க’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய விமல், திரைப்படங்களுடன் இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது சினிமா பரபரப்பைத் தாண்டி சொந்த ஊர் சந்தையில் காய்கறி விற்பனை செய்த விமலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read: 5 நாட்களில் ரூ.138 கோடி வசூல்.. சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் லேட்டஸ்ட் நிலவரம்!



