தூத்துக்குடியில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர், தனது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு சென்னையில் உள்ள செய்தி சேனல் அலுவலகத்திற்குள் புகுந்து வாக்குமூலம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தாளவாய்புரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (41). இவர் CRPF வீரராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் தமிழ்ச்செல்வன் ஊருக்கு சென்றபோது கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜூலை 31ம் தேதி இரவில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி உமா மகேஸ்வரியை(32) கொலை செய்ததாகவும், மேலும், 2 குழந்தைகளை தனது மாமனார் வீட்டில் விட்டுவிட்டு சி ஆர் பி எப் வீரர் தலைமறைவானார். தலைமறைவான CRPF வீரர் தமிழ்ச்செல்வன் குறித்து ஏரல் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, சில நாட்களுக்குப் பிறகு, அவர் சென்னையில் உள்ள ஒரு தொலைக்காட்சி சேனலை அணுகி, கொலை குறித்து பதிவு செய்ய விருப்பம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சேனலின் ஊழியர்கள், தேனாம்பேட்டை காவல் உதவி ஆணையர் அரோக்கியா ரவீந்திரனுக்குத் தகவல் தெரிவித்தனர். இவரது உத்தரவின்பேரில், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை அருகே தேனாம்பேட்டை போலீசாரால் தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டார். மேலும், தமிழ் செல்வன் தனது மனைவியைக் கண்காணிக்க தனது வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்களை பொருத்தியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.