வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இது இன்று காலை மேலும் வலு குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் நேற்று நிலை கொண்டிருந்தது. அப்போது புயலுக்கும், வடதமிழக கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 70 கி.மீ. ஆக இருந்தது. தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நகர்ந்த டிட்வா புயல், சென்னையில் இருந்து 140 கி.மீ. தொலைவில் வந்தபோது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. அப்போது வட தமிழக கரையை ஒட்டி 80 கி.மீ. தொலைவில் நிலவியது. இது தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்கிறது. இது இன்று (டிச.1) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறைய வாய்ப்பு உள்ளது. அப்போது, வட தமிழக கரையை ஒட்டி 20 கி.மீ. தொலைவில் நிலவும்.
இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிச.3 முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.வட தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



