தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
மறுபுறம் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தேர்தலை சந்திக்க உள்ளது. புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கிய விஜய் முதல் தேர்தலை சந்திக்க உள்ளார். வழக்கம் போல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டு தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கும் சூழலில் கட்சிகளுக்குள் உள் கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் “அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும்” என பேசியதற்காக, எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இதனிடையே பாஜகவிலும் தலைமைப் போட்டி அதிகரித்துள்ளது.
நயினார் நாகேந்திரனை விட அண்ணாமலை சிறப்பாக வழிநடத்துகிறார் என்ற பேச்சுகள் எழுந்ததால் இருவருக்குமிடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதனால் நயினார், அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கக்கூடாது என தீவிரமாக இருக்கிறார். இதற்கிடையில் அண்ணாமலை தரப்பு டெல்லி தலைமையிடம் நேரடியாக புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக கூட்டணி குறித்து திடீரென வியப்பூட்டும் கருத்து தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில், தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை இன்னும் உணரப்படவில்லை என்றும் ஆளும் கட்சியின் கூட்டணி வலிமையாக உள்ளது எனவும் கூறினார். வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் தோன்ற தொடங்கும் எனக் கூறிய அண்ணாமலை, அப்போது தங்களுடைய கூட்டணி முன்னிலை பெறத் தொடங்கும் என்றார்.
விஜய் இரண்டாவது இடத்தைப் பிடிக்கலாம். பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. ஆனால் அப்படி போட்டியிட்டால் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் வலிமை பாஜகவுக்கு இல்லை. அதனால் தான் கூட்டணி அமைக்கப்பட்டது. பாஜகவால் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த திடீர் கருத்து, பாஜகவின் உள்ளக அரசியலை மேலும் சிக்கலாக்கி, தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.