செங்கோட்டையனுக்கு பின்னால் திமுக இருக்கிறது தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த தொட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற வந்தேமாதரம் 150வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுடன் வந்தேமாதரம் பாடும் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கோட்டையன் அளித்த பேட்டியை பார்த்ததாகவும், அதில் சரியான தகவல் இல்லை. செங்கோட்டையனுக்கு பின்னால் திமுக இருக்கிறது என்றார்.
தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், தொழில் துறையினர், பொதுமக்களை சந்தித்து, அவர்களது நிறை குறைகளை கேட்டறிந்து, அதன்படி, மாநில அளவிலான பொதுக்கூட்டத்தில், அவற்றுக்கான தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கவே, ‘தமிழகம் தலை நிமிர’ என்ற சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து, ஏற்கனவே சட்டசபை கூட்டத்தில் பேசப்பட்டது. ஆனால், தி.மு.க. அரசு அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்வதாக தெரியவில்லை. கொள்ளையடிக்கும் கூட்டத்தின் பின்னாலேயே தமிழக மக்கள் போய்விடக்கூடாது. விவசாயிகளின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில், மத்திய வேளாண் துறை அமைச்சரை இங்கு அழைத்து வரவோ; அல்லது நீங்கள் விரும்பினால், டெல்லிக்கு உங்களை அழைத்துச் செல்லவோ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
செங்கோட்டையன் டெல்லிக்கு வந்து பாஜக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட சந்தித்து இருந்தார். அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்ட உடனே கூட பிரிந்துள்ள அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என பாஜக தான் தன்னை கேட்டுக் கொண்டது என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



