தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் பட்டியல், தேர்தல் பிரச்சாரம் என தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று திமுக கூட்டணியும், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுக கூட்டணியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன..
அதிமுகவின் கோட்டையாக திகழும் கொங்கு மண்டலத்திலும் இந்த வெற்றி பெற வேண்டும் என்று திமுக வியூகங்களை அமைத்து வருகிறது.. இதற்காகவே மேற்கு மண்டல திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார்.. இந்த தேர்தலில் மேற்கு மண்டலத்தில் இருந்தே திமுகவின் வெற்றி தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் பலமுறை கூறியுள்ளார்.. அதற்கேற்ப இந்த முறை கொங்கு மண்டலத்தை தட்டி தூக்க வேண்டும் என்ற முனைப்பில் செந்தில் பாலாஜி களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்..
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடலாம் என்ற தகவல் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. திமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..
கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, இந்த முறை கோவையில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக முன்பே கூறப்பட்டிருந்தது. ஆனால் இதை அவர் ஒருகட்டத்தில் மறுத்திருந்தார். இருப்பினும் தற்போது மீண்டும் கோவை தெற்கில் அவர் களமிறங்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
கோவையில் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் வலுவாக இருப்பதால், அங்கு வலுவான மற்றும் மக்களுக்கு பரிச்சயமான நபரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் திமுக தலைமையே செந்தில் பாலாஜியை களமிறக்க விரும்புகிறது என கூறப்படுகிறது.
மேலும், கரூரில் சில எதிர்ப்புகள் இருப்பதால், இந்த முறை கோவையில் போட்டியிட செந்தில் பாலாஜி முடிவு செய்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில், கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளுடன் அவர் நேரடியாக தொடர்பு கொண்டு அங்குள்ள கள நிலவரங்களை அறிந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது..
அந்த தொகுதியில் சிறுபான்மை வாக்காளர்கள் மற்றும் பிற சமூக மக்கள் சம அளவில் இருப்பதால் வெற்றி வாய்ப்பு அதிகம் என செந்தில் பாலாஜி கணித்துள்ளாராம்.. ஆனால் இதனால் அங்குள்ள திமுக நிர்வாகிகளில் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜி அங்கு போட்டியிட்டால், உள்ளூர் தலைவர்களுக்கு கிடைக்க வேண்டிய எம்.எல்.ஏ, அமைச்சர் வாய்ப்புகள் குறையலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர் கரூரை விட்டு கோவைக்கு மாறுவது இரண்டு பகுதிகளிலும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் திமுகவினர் சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.. குறிப்பாக தேர்தலுக்காக கோவை வந்த செந்தில் பாலாஜி, தேர்தல் முடிந்ததும் சென்றுவிடுவார் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்யலாம் என்றும் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.. இதனால் கோவை, கரூர் என இரு மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது தான் கட்சி நல்லது என்றும் திமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.. செந்தில் பாலாஜியின் மூவ் கொங்கு பகுதியில் கை கொடுக்குமா? மேற்கு மண்டலத்தை திமுக தட்டி தூக்குமா..? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
Read More : Flash : ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் விஜய்..! எப்போது..? எங்கு..?



