நாம் சிறுவயதிலிருந்து தினமும் பார்க்கும் தண்ணீர் தொட்டி ஏன் உயரத்தில் கட்டப்படுகிறது என்ற கேள்வி பலருக்கும் எழும். இதற்கு பின்னால் சாதாரண காரணம் அல்ல, நேரடியாக இயற்பியல் விதி தான் வேலை செய்கிறது.
பொதுவாக, கட்டிடங்களின் மேலோ அல்லது தனியாக கட்டப்படும் நீர்த்தேக்கக் கோபுரங்களின் மேலோ தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. இதன் முக்கிய காரணம் புவியீர்ப்பு விசை உருவாக்கும் நீரழுத்தம். நீர் உயரத்தில் இருக்கும் போது, அதன் எடை கீழ்நோக்கி அழுத்தத்தை உருவாக்கும். இந்த அழுத்தமே குழாய்களில் தண்ணீர் வேகமாகவும் தொடர்ந்து வரவும் உதவுகிறது. இதை அறிவியல் ரீதியாக ஹைட்ரோஸ்டேடிக் அழுத்தம் என அழைக்கப்படுகிறது.
உயரம் அதிகரிக்கும் போது, நீரழுத்தமும் அதிகரிக்கும். பொதுவாக, 10 மீட்டர் உயரத்திற்கு சுமார் 1 bar அளவுக்கு அழுத்தம் கிடைக்கும். அதனால் தான் வீடுகளில் ஷவர், ஃப்ளஷ் போன்றவை சரியாக வேலை செய்ய, தொட்டியை உயரத்தில் வைப்பது அவசியமாகிறது. தொட்டி தரையில் இருந்தால், இந்த இயற்கை அழுத்தம் கிடைக்காது; பம்ப் இல்லாமல் தண்ணீர் ஓடாது.
மேலும், உயரத்தில் தொட்டி அமைப்பதால், பம்பை தொடர்ந்து இயக்க வேண்டிய அவசியம் குறைகிறது. ஒரு முறை தண்ணீர் நிரப்பிவிட்டால், தேவையான நேரங்களில் புவியீர்ப்பு விசையால் தண்ணீர் தானாக கீழே வருகிறது. இதனால் மின்சாரச் செலவு குறையும். மின்சாரம் இல்லாத நேரத்திலும் தண்ணீர் கிடைக்கும் என்பது மிகப்பெரிய நன்மை.
அதுமட்டுமல்லாமல், உயரத்தில் உள்ள தொட்டி ஒரு அவசர சேமிப்பாகவும் செயல்படுகிறது. தீ விபத்து போன்ற சூழ்நிலைகளில், போதுமான அழுத்தத்துடன் தண்ணீர் கிடைக்க உதவுகிறது. இதனால் பாதுகாப்பு கோணத்திலும் இது முக்கியமானது. மறுபுறம், நிலத்தடி தொட்டிகள் பல சிக்கல்களை ஏற்படுத்தும். அவற்றில் இருந்து தண்ணீர் எடுக்க எப்போதும் பம்ப் தேவைப்படும்; இது அதிக மின்சாரச் செலவை ஏற்படுத்தும்.
கசிவு ஏற்பட்டால் கண்டுபிடிப்பதும் சீர்செய்வதும் கடினம். மேலும், நிலத்தடி மாசுபாடு மற்றும் பாக்டீரியா வளர்ச்சி அபாயமும் அதிகம். இதனால் தான், நீர்த்தேக்கங்கள் பொதுவாக உயரத்தில் கட்டப்படுகின்றன. இது சுலபமான, குறைந்த செலவான, மேலும் அறிவியல் ரீதியாக சரியான தீர்வாக கருதப்படுகிறது.
Read more: மூன்றில் ஒரு வேலை மீது AI ஏற்படுத்தும் தாக்கம்… புதிய ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்..!



