“பிள்ளைகளை பெற்றுவிட்டோம் என்பதற்காக அவர்களின் வாழ்க்கையை முழுமையாக நாமே தீர்மானிக்கக் கூடாது” என்ற கருத்தை முன்வைத்த 65 வயது பாட்டியின் பேச்சு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. பெற்றோரின் அன்புக்கும், பிள்ளைகளின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் இடையே இருக்கும் எல்லை குறித்து அவர் பேசிய விதம் இளம் தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த சாவித்திரி பாட்டி, இன்ஸ்டாகிராமில் ‘தாய் சாவித்திரி’ என்ற பெயரில் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், பிள்ளைகளை உணர்வுபூர்வமாக கட்டுப்படுத்தும் பழக்கத்தை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகளை வளர்த்ததற்காக அதை காரணமாக வைத்து அவர்களிடம் தியாகங்களை நினைவூட்டி குற்ற உணர்வை ஏற்படுத்தக் கூடாது என்பதே அவரது பேச்சின் முக்கிய அம்சமாக இருந்தது. குழந்தைகளை பெற்றெடுப்பது பெற்றோரின் முடிவு; அதற்காக அவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் பெற்றோரின் விருப்பத்துக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.
அதேபோல், பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளை குழந்தைகளின் வாழ்க்கையில் நிறைவேற்ற முயற்சிப்பதும் சரியல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். எந்த படிப்பை தேர்வு செய்ய வேண்டும், எந்த வேலையை செய்ய வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதுபோன்ற முக்கிய முடிவுகளில் பிள்ளைகளின் விருப்பத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே அவரது அறிவுரையாக இருந்தது.
“நாம் சாதிக்க நினைத்ததை நமது பிள்ளைகள் சாதிக்க வேண்டும்” என்ற எண்ணத்தை பெற்றோர் தங்களுக்குள் வைத்துக்கொள்வதைவிட, குழந்தைகள் தங்களுக்கான இலக்குகளை தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கருத்தும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
பிள்ளைகள் வளர்ந்த பிறகும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதை தவிர்த்து, அவர்களின் முடிவுகளை மதித்து வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற இந்த அணுகுமுறை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் சுமார் 1.83 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. பலரும் பாட்டியின் கருத்துகளை வரவேற்று கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில், சிலர் இந்த வீடியோவை தங்கள் பெற்றோரிடம் காட்டியபோது, “இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ” என்று அவர்கள் நம்ப மறுப்பதாக நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளனர்.
ஒரு தலைமுறையைச் சேர்ந்த பாட்டி, மற்றொரு தலைமுறையின் பெற்றோரிடம் முன்வைத்த இந்தக் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தையும் கவனத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
Also Read: கையில் வைத்துக்கொண்டால் போதும்.. பல டிஜிட்டல் வேலைகளை செய்யும் குட்டி ஏஐ சாதனம்!


