கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி நியமன ஆணைகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் விஜய், கடந்த ஜூலை 10-ஆம் தேதி பலியானவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 நபர்களுக்கு அரசுப்பணிக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த பணி நியமனங்களை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, தமிழக அரசு வழங்கிய பணி நியமன ஆணைகளை ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அதன்படி, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்கக்கோரியும், ரத்து செய்யப்பட்ட பணி நியமனங்களை மீண்டும் உறுதி செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : செம குட் நியூஸ்..!! இனி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி..!! அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி..!!



