திருமண வாழ்க்கையில் துணையின் பாதுகாப்பும் மரியாதையும் அடிப்படை உரிமைகளாக இருக்கும் நிலையில், வரதட்சணை கேட்டு பெண்கள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவர் மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தற்போது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. உத்தரப் பிரதேச மாநிலம் சித்திரகூட் மாவட்டம் பரத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் வந்தனா.
இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு கணவர் தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு தன்னை துன்புறுத்தி வந்ததாக வந்தனா தெரிவித்துள்ளார். குறிப்பாக, ரூ.2 லட்சம் பணத்தையும், ஒரு தங்கச் சங்கிலியையும் பெற்றோரிடம் இருந்து வாங்கி வருமாறு கணவர் வற்புறுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். பணம் மற்றும் நகை தொடர்பான பிரச்சினை தொடர்ந்து வந்த நிலையில், தன்னை உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தன்னுடன் பணிபுரியும் லாரி ஓட்டுநர்களுடன் கட்டாயமாக உடலுறவு கொள்ளுமாறு கணவர் வற்புறுத்தியதாக வந்தனா கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தபோது, தன்னை தாக்கியதுடன், பாலியல் தொழிலின் மூலமாகக்கூட பணம் சம்பாதித்து கொண்டு வருமாறு கணவர் வற்புறுத்தியதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தற்போது கர்ப்பமாக இருக்கும் வந்தனா, கணவரின் செயல்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். தனக்கும் தனது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என அவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து வந்தனா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
Also Read: சுதந்திர தின விழாவில் த்ரிஷா பங்கேற்பு… “வெட்கக்கேடானது” என கஸ்தூரி கடும் விமர்சனம்!



