நெய் இந்தியர்களின் பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் நீண்ட காலமாக இடம்பெற்று வருகிறது. ரொட்டி, பருப்பு வகைகள் முதல் இனிப்புகள் வரை பல்வேறு உணவுகளில் நெய் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதில் கொழுப்பு அதிகம் இருப்பதால், நெய்யை அதிகமாக சாப்பிடுவது பித்தப்பையில் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
பித்தப்பைக் கற்களில் பெரும்பாலானவை கொலஸ்ட்ரால் சார்ந்தவை என்பதால், நெய் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கும் இதற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால், மருத்துவர்களின் விளக்கப்படி, பித்தப்பைக் கற்கள் உருவாவதற்கு ஒரு குறிப்பிட்ட உணவை மட்டும் காரணமாகக் கூற முடியாது.
நெய் சாப்பிடுவதால் நேரடியாக பித்தப்பைக் கற்கள் உருவாகும் என்று கூற முடியாது என காஸ்ட்ரோஎன்டாலஜி மற்றும் ஹெபடாலஜி நிபுணர் டாக்டர் ஜதிந்தர் சிங் போகல் தெரிவித்துள்ளார்.
பித்தத்தில் உள்ள பல்வேறு பொருட்களின் இயல்பான சமநிலை பாதிக்கப்படும்போது பித்தப்பைக் கற்கள் உருவாகலாம். கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீர் பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. உணவில் உள்ள கொழுப்பை செரிமானம் செய்ய பித்தநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து சமநிலை பாதிக்கப்படும்போது சிலருக்கு பித்தப்பைக் கற்கள் உருவாகலாம்.
அதனால், நெய்யை மட்டும் பித்தப்பைக் கற்களுக்கான நேரடி காரணமாக கருதுவது சரியான அணுகுமுறை அல்ல. அதே நேரத்தில், நெய்யை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றது இல்லை.
நெய்யில் அதிக கலோரிகளும் கணிசமான அளவு நிறைவுற்ற கொழுப்பும் உள்ளன. எனவே, தினசரி உணவில் நெய்யை அளவோடு சேர்த்துக்கொள்வது முக்கியம். குறிப்பாக ஏற்கனவே உடல் எடை அதிகரிப்பு, அதிக கொலஸ்ட்ரால் அல்லது பித்தப்பை தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்கள் உணவில் கொழுப்பின் அளவை கவனமாக கட்டுப்படுத்த வேண்டும்.
பித்தப்பைக் கற்கள் உருவாகும் அபாயம் ஒருவரின் ஒட்டுமொத்த உணவுப் பழக்கம், உடல் எடை மற்றும் பிற உடல்நல காரணிகளைப் பொறுத்து மாறுபடும். எனவே, நெய்யை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை; அளவோடு எடுத்துக்கொள்வதே முக்கியம்.
Also Read: குழந்தையின்மைக்கு சிகிச்சை பெற சென்ற இளைஞர்.. காரணத்தை கண்டு மிரண்டு போன மருத்துவர்கள்!



