காங்கோ கிழக்கு மாகாணத்தில், எபோலா வைரஸின் அரிய வகை திரிபு பரவியதில் இதுவரை சுமார் 88 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது சிகிச்சை இல்லாத இந்த திரிபு, உலகளாவிய கவலையை அதிகரித்துள்ளது.
இந்த பரவலை தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு (WHO) சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. இது மிக உயர்ந்த எச்சரிக்கை நிலை என கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, இந்த நோய் குறைந்தது நான்கு வாரங்களாக கண்டறியப்படாமல் பரவி வந்துள்ளது. சுரங்க நகரங்கள், கிளர்ச்சி பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
விஞ்ஞானிகளை கவலைப்படுத்திய புதிய வைரஸ் வகை: இந்த முறை கண்டறியப்பட்டிருக்கும் வைரஸ், வழக்கமாக பரவும் “ஜைர்” வகை அல்லாமல், அரிதாகக் காணப்படும் “புண்டிபுக்யோ” திரிபாக இருக்கலாம் என்ற ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே விஞ்ஞானிகளை அதிக கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் எர்வெபோ தடுப்பூசி பெரும்பாலும் ஜைர் வகை வைரஸுக்காகவே உருவாக்கப்பட்டதால், தற்போதைய பரவலுக்கு அது முழுமையாக பலன் அளிக்குமா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து உகாண்டா மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட அண்டை நாடுகள் எல்லை கண்காணிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளன. எல்லைச் சோதனைகள், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணிகளும் வேகமடைந்துள்ளன. மேலும் வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் மருத்துவக் குழுக்கள் மற்றும் நிதி உதவிகளை சம்பவ இடங்களுக்கு அனுப்பியுள்ளது.
எபோலா என்றால் என்ன? எபோலா என்பது மிகவும் ஆபத்தான வைரஸ் நோயாகும். இது “எபோலா வைரஸ் நோய்” (EVD) என அழைக்கப்படுகிறது. மனித உடலின் இரத்த நாளங்கள், உடல் உறுப்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை இந்த வைரஸ் கடுமையாக தாக்குகிறது.
கடுமையான நிலைகளில் உடலின் உள்ளுறுப்பு செயலிழப்பு, உள் இரத்தப்போக்கு, அதிர்ச்சி மற்றும் உயிரிழப்பு ஏற்படக்கூடும். சில நோய்ப் பரவல்களில் இறப்பு விகிதம் 90 சதவீதம் வரை பதிவாகியுள்ளது. இந்த வைரஸ் முதன்முதலில் 1976-ஆம் ஆண்டு காங்கோவில் உள்ள எபோலா நதிக்கரையோரத்தில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அந்த நாட்டில் மட்டும் 17 முறை நோய்ப் பரவல் ஏற்பட்டுள்ளது.
எப்படி பரவுகிறது? விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பழ வௌவால்கள் இந்த வைரஸின் இயற்கை தாங்கிகளாக இருக்கலாம். பாதிக்கப்பட்ட காட்டு விலங்குகள், குறிப்பாக குரங்குகள் மற்றும் மான்கள் மூலம் மனிதர்களுக்கு வைரஸ் பரவுகிறது. மனிதர்களுக்குள் பரவும்போது, இரத்தம், வாந்தி, உமிழ்நீர், வியர்வை, சிறுநீர் மற்றும் பிற உடல் திரவங்களின் மூலம் தொற்று ஏற்படுகிறது.
மருத்துவமனைகள் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற இடங்களில் நெருங்கிய தொடர்பு காரணமாக வைரஸ் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது. ஆனால் கோவிட்-19 போல காற்றின் மூலம் இது பரவாது என்பதால், சாதாரணமாக அருகில் இருப்பதால் மட்டும் தொற்று ஏற்படாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எபோலா அறிகுறிகள் என்ன? எபோலா தொற்றின் அறிகுறிகள் பொதுவாக இரண்டு முதல் 21 நாட்களுக்குள் வெளிப்படும். ஆரம்பத்தில் திடீர் காய்ச்சல், கடுமையான சோர்வு, தலைவலி, தசை வலி மற்றும் தொண்டை வலி போன்றவை தோன்றும். பின்னர் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தோல் தடிப்புகள் மற்றும் கடுமையான நிலைகளில் உள் மற்றும் வெளிப்புற இரத்தக்கசிவு ஏற்படக்கூடும். சிகிச்சை இல்லாமல் விட்டால் உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.
Read more: பயணிகள் ரயிலில் தீ விபத்து; பீதியில் உறைந்த பயணிகள்.. பீகாரில் பெரும் பரபரப்பு..!



