நாட்டில் நடைபெறும் அரசியல் சூழல் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார். இளைஞர்கள் தங்களது உரிமைகளுக்காக கேள்வி கேட்கத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டில் நிலவி வரும் “சர்வாதிகார ஆட்சியின் முடிவு நெருங்கிவிட்டது” என அவர் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) மாநில மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரகாஷ் ராஜ் பேசினார்.
அப்போது, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை சுட்டிக்காட்டிய அவர், இளைஞர்கள் தங்களுக்கு எதிரான அநீதிகளை அடையாளம் கண்டு, அரசிடம் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “இப்போது உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியும்” என்று இளைஞர்கள் கூறியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், “நாங்கள் உங்களைப் பார்த்து பயப்படவில்லை. உங்கள் அரசியலைப் புரிந்துகொண்டுள்ளோம்” என்ற மனநிலைக்கு இளைஞர்கள் வந்திருப்பது முக்கியமான மாற்றம் என்றும் அவர் கூறினார்.
விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடந்த காலங்களில் போராட்டங்களை நடத்தியிருந்தாலும், அவர்களுக்கு இழப்பதற்கு வேலை, நிலம் உள்ளிட்டவை இருந்ததால் போராட்டத்தை நீண்ட காலத்துக்கு முன்னெடுக்க முடியவில்லை என பிரகாஷ் ராஜ் தெரிவித்தார். ஆனால், இளைஞர்கள் தங்களது எதிர்காலத்துக்காக அச்சமின்றி குரல் எழுப்பி வருவதாக அவர் கூறினார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். அப்போது ஏராளமானோர் டெல்லியில் திரண்டதுடன், நாடாளுமன்றத்தை நோக்கியும் போராட்டம் நடத்த முயன்றதாகவும், அந்தப் போராட்டம் ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்கள் வன்முறையை நாடாமல், கேள்விகளை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது என்றும் பிரகாஷ் ராஜ் கூறினார். சமூக ஊடகங்களும் போராட்டங்களின் தன்மையை மாற்றியுள்ளதாகவும், தற்போது போராட்டங்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் மட்டுப்படாமல் மக்கள் இருக்கும் இடங்களிலேயே நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாஜக அல்லது தற்போதைய அரசை தோற்கடிப்பது மட்டுமே போதாது எனக் கூறிய பிரகாஷ் ராஜ், அதற்கு மாற்றாக வரக்கூடிய ஆட்சியையும் மக்கள் விழிப்புணர்வுடன் தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“ஒரு ஆட்சியை வீழ்த்துவது மட்டும் இலக்காக இருக்கக்கூடாது. எதிர்காலத்தில் வேறு வடிவில் அதேபோன்ற ஆட்சி மீண்டும் உருவாகாமல் இருக்க, ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
உடனடி அரசியல் வெற்றியை நோக்கமாகக் கொண்ட தனது பயணம் அல்ல என்றும், சமூகத்தில் நீதியையும் நல்ல மாற்றத்தையும் உருவாக்குவதற்கான நீண்டகால முயற்சியாக இதை பார்ப்பதாகவும் பிரகாஷ் ராஜ் கூறினார்.
இளைஞர்கள் அரசியல் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருந்து, முந்தைய தலைமுறைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Also Read: பாகிஸ்தான் அல்ல, இந்தியாவின் மெயின் எதிரியே சீனா தான்!. முன்னாள் ராணுவ தளபதி நரவனே அதிரடி



