டிடிவி தினகரன் இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தனது ஆட்சியை பாஜக காப்பாற்றியதாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதிலளித்தார்.. அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாகவும் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்தார்..
மேலும் பேசிய அவர் “ கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டதால் தான் இபிஎஸ் முதல்வரானார்.. கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏக்களிடம் முதல்வர் வேட்பாளர் என பெயர் குறிப்பிடாமல் கையெழுத்து வாங்கச் சொன்னவர் இபிஎஸ்.. சசிகலா கூறியதால் தான் 122 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்களும் ஆதரவளித்ததால் தான் இபிஎஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.. அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 அதிமுக எம்.எல்.ஏக்கள் தானே தவிர பாஜக அல்ல.. ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் தேர்தலில் வெற்றி பெற்று பழனிசாமி முதல்வராக முடியவில்லை..
நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, சட்டமன்ற தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை எனக்கூறியவர் தான் இபிஎஸ்.. துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறார்.. டெல்லிக்கு சென்று 6 கார்கள் மாறி மாறி திருட்டுத்தனமாக அமித்ஷாவை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி.. தன்மானம் முக்கியம் எனக் கூறிய இபிஎஸ் தற்போது டெல்லி சென்றது ஏன்? அதிமுகவிற்கு தற்போது உள்ள 20% வாக்குகளும் வரும் தேர்தலில் 10 சதவீதமாக குறையத்தான் போகிறது.. எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார்..
இபிஎஸ் தான் என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று அமித்ஷா இதுவரை குறிப்பிடவில்லை. அதிமுக கூட்டணிக்கு பெரிய கட்சிகள் யாரும் செல்லமாட்டார்கள்..” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய செங்கோட்டையனை யாருடையை கைக்கூலி என்று இபிஎஸ் கூறுகிறார்.. துரோகத்தை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் இருக்க முடியும்.. தோல்வி பயத்தில் இபிஎஸ் உளறிக் கொண்டிருக்கிறார்.. இபிஎஸ் பிதற்றுவதை பற்றி கேள்விக் கேட்க வேண்டாம்..” என்று தெரிவித்தார்..
முன்னதாக நேற்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி “ நான் சொல்வதை எழுதிக் கொள்ளுங்கள். எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை விட தன்மானம்தான் முக்கியம். அதை இமியளவும் விட்டுக்கொடுக்க மாட்டோம். சில பேரை கைக்கூலியாக வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டு உள்ளீர்கள். அந்த கைக்கூலி யார் என்பதை அடையாளம் கண்டுவிட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும். சில பேர் அதிமுக அரசை கவிழ்க்க பார்த்தார்கள். அவர்களை மன்னித்து, அரவணைத்து, துணை முதல்வர் பொறுப்பை கொடுத்தோம். இருந்தும் திருந்தியபாடில்லை. புனிதம் மிக்க அதிமுக தலைமை கழகத்தை அடித்து நொறுக்கினார்கள். அவர்களை நாங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா? அது தொண்டனின் சொத்து.
உன்னொருவர் அதிமுக அரசை கவிழ்க்க 18 சட்டமன்ற உறுப்பினர்களை கடத்தி சென்றார். அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா? இதை யார் ஏற்றுக் கொள்வார்கள்? நான் தொண்டனாக இருந்து உயர்ந்திருக்கிறேன். எனக்கு உறுதியான எண்ணமும், மனநிலையும், அஞ்சா நெஞ்சமும் உண்டு. என்னை யாரும் விரட்டி விட முடியாது. இதுவரை கடந்த காலத்திலும் சரி, அதிமுக ஆட்சியிலும் சரி, இப்போதும் சரி மத்தியில் இருப்பவர்கள் யாரும் நமக்கு எந்தவித அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை. நமக்கு நன்மைதான் செய்தார்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சிலர் கட்சியை கபளீகரம் செய்யப் பார்த்தார்கள். அதிமுக ஆட்சியை மத்தியில் இருந்தவர்கள் தான் காப்பாற்றி கொடுத்தார்கள்.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. வள்ளுவர் சொன்னபடி நன்றியோடு நாங்கள் இருக்கிறோம். எனவே மத்திய பாஜக அரசுக்கு நன்றியோடு இருக்கிறோம். அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இதில் அரசியல் வியூகம் உள்ளது. கூட்டணி சேர்வது அரசியல் நகர்வு. இது தேர்தல் சார்ந்தது. எதிர்க்கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம்.” என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..