மக்கள் பிரச்சினைகளுக்காக முதன்முதலாக குரல் கொடுப்பது அதிமுக தான் என கோவில்பட்டியில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர்; திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. எப்போது இந்த ஆட்சி அகற்றப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுகவை வீழ்த்தி அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்று அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். எங்கள் கூட்டணியை பார்த்து ஸ்டாலின் பதறுகிறார். அவருக்கு நடுக்கம் வந்துவிட்டது. அவருக்கு ஆட்சி பறிபோய்விடும் என்ற பயத்தில் உள்ளார். திமுக நல்லது செய்த சரித்திரம் கிடையாது. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன். அனைத்து துறைகளிலும் ஊழல்.
இன்றைக்கு லட்சம் லாவண்யம் மிகுந்த மாநிலம் தமிழகம்தான். அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டணி கட்சியினர் அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர். நாங்கள் எப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்தோமோ அப்போதே திமுக வீழ்ச்சியடைந்துவிட்டது. பாஜக மதவாத கட்சி என அவதூறு ஸ்டாலின் பரப்புகிறார். மத்தியில் 3 முறை ஆட்சி அமைத்து பிரதமர் மோடி தலைமையில் சிறப்பாக செயல் பட்டு உலக நாடுகள் பாராட்டும் அளவில் பாஜக உள்ளது.
1999-ல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்து வெற்றி பெற்றது. அந்த அமைச்சரவையில் திமுகவைச் சேர்ந்த முரசொலி மாறன் அமைச்சராக இருந்தார். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் பராவயில்லை என இலாக்கா இல்லாத அமைச்சராக வைத்து அழகு பார்த்த கட்சி பாஜக. முரசொலி மாறன் மறைந்தவுடன் அவரது இறுதி ஊர்வலத்தில் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் பங்கேற்றனர். அடுத்த 15 நாட்களில் காங்கிரஸ் கூட்டணி வைத்து, அந்த அமைச்சரவையில் திமுக இடம் வாங்கிக் கொண்டது. பச்சோந்தி கூட கொஞ்சம் நேரம் கழித்துதான் நிறம் மாறும். ஆனால், திமுக உடனடியாக நிறம் மாறிவிடும்.
திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது, மதவாத கட்சியாக இல்லை. அதிமுக பாஜகவுடன் சேர்ந்தால் அவதூறு பரப்பி அரசியல் லாபம் தேடுகின்றனர். ஒவ்வொரு கட்சிக்கு ஒரு கொள்கை உள்ளது. ஆனால், திமுகவுக்கு கொள்கையே கிடையாது. இப்போது உதயநிதியை படிப்படியாக கொண்டு வர முயற்சி செய்கின்றனர். திமுக ஆட்சி வந்து செய்த ஒரே சாதனை ஸ்டாலின் மகன் உதயநிதியை துணை முதல்வராக ஆக்கியது தான். வேறு எந்த சாதனையும் இல்லை. இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது என்றார்.