ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே புயல் கரையை கடந்தது. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே மோந்தா புயல் கரையை கடந்தது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த திங்கட்கிழமை உருவான புயல் மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே அதிகாலை கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால் ஆந்திராவின் கிருஷ்ணா, மசூலிபட்டினம் உள்ளிட்ட கடலோர் பகுதிகளில் இடி, மின்னலுடன் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன அல்லூரி மாவட்டத்தில் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 3ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை – காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியின் கடலோர பகுதிகள் மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வரை வேகத்தில் தரைக்காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



