2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து நின்றாலும் 23% வாக்குகளை கைப்பற்றும் என திமுக நடத்திய ரகசிய சர்வேயில் தெரியவந்துள்ளது.
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அனைவரும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் தேர்தலாக மாறியுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணி வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம் என்றாலும், புதிய தலைமைகள் மற்றும் இளைய தலைமுறை வருகையால் தேர்தல் கணிக்க முடியாத போட்டியாக மாறலாம்.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இருப்பது ஒரு வலுவான கூட்டணியாகும். ஸ்டாலின் தலைமையின் நிர்வாகம், நலத்திட்டங்கள், பெண்கள் சார்ந்த பயன்கள் திமுகவிற்கு சாதகமாக இருக்கும். ஆனால், பழைய தலைமையின் மீது மக்கள் மனதில் கொஞ்சம் சலிப்பு இருக்கலாம். அதிமுக – பாஜக கூட்டணி தமிழகத்துக்கு புதிது இல்லை. கொங்கு மண்டலத்தை மீண்டும் கைப்பற்ற அதிமுக பெரும் முயற்சியை மேற்கொள்கிறது.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்ற பிரிவுகள் இன்று வரை ஒரு முடிவுக்கு வராமல் இருப்பது அதிமுகவின் வாக்குகளை பிளவுபடுத்தும் சூழல் உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை நடிகர் விஜய் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை தனி கட்சியாக உள்ளது. வேறு எந்த கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேரவில்லை. இருப்பினும் இளைய தலைமுறையினரிடையே தமிழக வெற்றிக் கழகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து நின்றாலும் 23% வாக்குகளை கைப்பற்றும் என திமுக நடத்திய ரகசிய சர்வேயில் தெரியவந்துள்ளதாக The Print தெரிவித்துள்ளது. கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புகளுக்கு பிறகும் கூட, மக்களிடம் விஜய்யின் செல்வாக்கு குறையவில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 1,245 பேர் என மொத்தம் 2.91 லட்சம் பேரிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2026 தேர்தலில் மிக கடுமையான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.