அதிமுகவில் இருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், பாஜகவில் இணையவுள்ளார்.
புதுவை மாநில அதிமுகவில் புரட்சித் தலைவி ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தவர் பாஸ்கர். கடந்த 2011-16, 2016-21-ம் ஆண்டுகளில் முதலியார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாக அதிமுக சார்பில் போட்டியிட்ட பாஸ்கர் தோல்வியடைந்தார். இருப்பினும் கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
புதுச்சேரி மாநில அதிமுக மாநில செயலாளர் அன்பழகனின் தம்பியான இவர், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு இரு தினங்களுக்கு முன் கடிதம் அனுப்பினார். ஏற்கெனவே முன்னாள் எம்எல்ஏ அசனா அதிமுகவில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து இவரும் விலகினார். இதில், அசனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டார். இதே போல் பாஸ்கர் வேறு ஒரு கட்சியில் இணைய இருப்பதாக பேசப்பட்டது.
இந்நிலையில், நேற்று புதுச்சேரி வந்த பாஜக மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை, பாஜக மாநிலத்தலைவர் வி.பி.ராமலிங்கத்துடன் சென்று பாஸ்கர் சந்தித்தார். விரைவில் அவர் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.



