கோவில்பட்டியில் 30 சதவீத வாக்காளரை காணவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம் சுட்டியுள்ளார்.
கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு; தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு என்பது திமுகவுக்கு கை வந்த கலை. தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு புகார் சென்றதால், எஸ்ஐஆர் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இது ஒன்றும் புதிது அல்ல. இதற்காக ஏன் திமுக வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும். சீர்திருத்தம் என்பது குறை நிறைகளை சரி செய்யத்தான். மடியில் கனம் இருப்பதால் வழியில் பயம் என்பதை போல் அந்த நிலை தான் திமுகவுக்கு. இவர்கள் என்ன எதிர்ப்பு தெரிவித்தாலும் எஸ்ஐஆர் பணியை நிறுத்த முடியாது.
தேர்தல் ஆணையம் மத்திய, மாநில அரசுகளுக்கு கட்டுப்பட்டது கிடையாது.கோவில்பட்டி தொகுதியை பொருத்த வரை கடந்த 9 மாதத்துக்கு முன்பிருந்தே வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை தொடங்கி விட்டோம். இதில், 70 சதவீதம் பேர் இந்த தொகுதியைச் சேர்ந்தவர்கள். இரட்டைபதிவு, இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது என 30 சதவீதம் பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும். ஆனால் ஆள் இருக்க மாட்டார்கள். வாக்குப்பதிவு அன்று மட்டும் வந்து அந்த வாக்குகள் விழும். அதனால் இந்த தேர்தலில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.



