ஜெம் குழுமத்தின் தலைவர் ஆர். வீரமணி. வயது 84. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் வீரமணி கைது செய்யப்பட்டார். வீரமணியிடம் சிறுமிகளை அழைத்துச் சென்ற சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரன் சிம்மனும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை குறிவைத்து வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதோடு, பல தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் சிறுமிகளை அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் வழக்குக்கு தொடர்புடைய புகைப்படங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை போலீசார் கைப்பற்றினர். இதனிடையே, வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்து மேலும் சில சிறுமிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனால் வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. வீரமணி மீதான வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் யாரும் தப்பிக்கக் கூடாது என்றும், விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களில் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை இரண்டு முறை நேரில் அழைத்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய தனிப்படைக்கு சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்ததாக, வீரமணி வழக்கை கையாண்ட காவல் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வழக்கில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கைமாறியதா? பணம் கைமாறியிருந்தால் யார் யாருக்கு சென்றது? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்காக சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் புதிய விசாரணைக் குழுவை காவல் ஆணையர் அமல்ராஜ் அமைத்துள்ளார்.
ஒருபுறம் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கையும், மறுபுறம் வழக்கை கையாண்ட விதம் மற்றும் பணப் பரிமாற்றம் தொடர்பான புகார்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் ஜெம் வீரமணி வழக்கு விசாரணை தற்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.



