தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் அரசியல் பரபரப்பை கிளப்பியுள்ளன. எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநிலத்தில் ‘தொங்கு’ சட்டசபை உருவாகியுள்ளது. தேர்தல் முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி 73 இடங்களையும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
234 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சமாக 118 இடங்கள் தேவை. ஆனால் தவெக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், ஆட்சியை அமைக்க கூடுதல் ஆதரவு அவசியமாகியுள்ளது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
அதில், திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்யக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பெரும்பான்மை வாக்கெடுப்பை நடத்த தற்காலிக சபாநாயகர் நியமனம் அவசியம் என்பதால், ஒரு உறுப்பினரின் வாக்கும் கணக்கில் வராமல் போகும் வாய்ப்பு உள்ளது. இதனால், தவெகக்கு கூடுதலாக சுமார் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.
ஆட்சி அமைப்பதற்காக தவெக தரப்பு தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த சந்திப்புக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். “இது அரசியல் பேச்சுவார்த்தை அல்ல.
எங்கள் பொதுச்செயலாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி. தவெக ஆட்சி அமைக்க அதிமுக எந்தவித ஆதரவும் வழங்காது” என்று அவர் தெளிவாக தெரிவித்துள்ளார். இதன் மூலம், தவெக ஆட்சி அமைப்பதற்கான பாதை மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது. அடுத்த கட்டமாக, தவெக மற்ற கட்சிகள் அல்லது சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவை பெற முயற்சிக்குமா என்பது அரசியல் வட்டாரங்களில் கவனமாக பார்க்கப்படுகிறது.



