தமிழ்நாடு அரசு எரிசக்தி துறை முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நல பாதிப்பு காரணமாக, கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. கொரோனா காலத்தில் தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலராக பணியாற்றியவர் பீலா வெங்கடேசன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அடிப்படையில் மருத்துவரான பீலா வெங்கடேசன், இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகி, பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராகப் பணியாற்றிய அனுபவமிக்கவர்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத் துறைச் செயலாளராகப் பணியாற்றியவர். மேலும், பல பெரும் பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்த அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.



