திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொசவபட்டியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன். இவர் சௌமியா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே செந்தமிழ்செல்வனும் அவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் 23 வயதுடைய ஸ்டாலின் என்பவரும் நண்பர்களாக பழகியுள்ளனர்.
செந்தமிழ் செல்வனுடன் பேச ஸ்டாலின் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஸ்டாலினுக்கும் செந்தமிழ்செல்வனின் மனைவி சௌமியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை அறிந்த செந்தமிழ் செல்வன் அவருடைய மைத்துனருடன் சேர்ந்து ஸ்டாலினை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதனை அறிந்த ஸ்டாலின் காவல் நிலையத்திற்கு சென்று தனது உயிருக்கு ஆபத்து என எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஸ்டாலினை செந்தமிழ் செல்வன் மற்றும் அவரது மைத்துனற்கள் அரிவாள் மற்றும் கத்தியால் தலை மற்றும் கழுத்தில் கடுமையாக தாக்கியுள்ளனர். தடுக்க வந்த ஸ்டாலின் தந்தையையும் வெட்டியுள்ளனர்.
இதனால் பலத்த காயம் அடைந்த ஸ்டாலின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்டாலினின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவருடைய தந்தைக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.