தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய மியான்மார் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது, வடகிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் – மியான்மார் கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது.
மத்தியமேற்கு வங்கக்கடல்பகுதிகளில் ஒரு வளிமண்டலகீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று வட தமிழகத்தில் சில இடங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 6, 7 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 8, 9 தேதிகளில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.



