ஹிமாசல பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 355 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில அவசரகால நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இமயமலையையொட்டிய ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பலத்த மழையால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டுள்ளன. அண்டை மாநிலமான பஞ்சாபும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20-இல் இருந்து இதுவரை 45 மேகவெடிப்புகள், 95 பெருவெள்ளங்கள், 132 பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டு, ரூ.3,780 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான சேதங்களை விளைவித்துள்ளது.
ஹிமாசல பிரதேசத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 1,000 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்தது. 1,200-க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதிபட்சமாக மண்டியில் 281, சிம்லாவில் 261, குலுவில் 231 சாலைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. ஹிமாசல பிரதேசத்தில் நடப்பு பருவமழை காலகட்டத்தில், மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 355 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேரை காணவில்லை என்று மாநில அவசரகால நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.
பார்மெளர் முதல் சம்பா வரையிலான இடங்களில் இருந்து 350 யாத்ரிகர்கள் விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனர். இந்த யாத்திரையில் இதுவரை 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.