ஜெர்மனியின் ஃபிராங்பேர்ட் நகரில் இருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா AI-2030 விமானத்தில் திடீரென விமான கடத்தல் எச்சரிக்கை (Squawk 7500) வெளியானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த விமானம் அவசரமாக ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
விமானம் அகமதாபாத் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது, அகமதாபாத் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு (ATC) ‘Squawk 7500’ என்ற கடத்தல் எச்சரிக்கை சிக்னல் சில வினாடிகளுக்குப் பரவியது.
கடத்தல் சிக்னல் கிடைத்த அடுத்த கணமே பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் உடனடியாக ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டு, காலை 9:45 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தரையிறங்கிய விமானம் உடனடியாக விமான நிலையத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பு முகமைகளால் முழுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. காவல்துறை வட்டாரங்களின் முதற்கட்ட தகவல்களின்படி, விமானி தவறுதலாக கடத்தல் பொத்தானை (Squawk 7500) அழுத்தியிருக்கலாம் எனக் கூறப்பட்டது.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டை விமானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். தானாகவோ அல்லது தவறுதலாகவோ அந்த சிக்னலை அழுத்தவில்லை என்றும், விமானத்தில் ஏற்பட்ட ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த சிக்னல் தானாக உருவாகியிருக்கலாம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதையடுத்து, விமானப் பராமரிப்புப் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தை ஆய்வு செய்தனர். இச்சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்ககம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விமானம் தனிமைப் பகுதியில் நிறுத்தப்பட்டதும், அதில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு வருகை மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மீண்டும் தீவிர பாதுகாப்பு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அனைத்துப் பாதுகாப்புப் பரிசோதனைகளும் முடிந்த பிறகு, அதே விமானத்தில் பயணிகள் மீண்டும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
‘Squawk 7500’ என்றால் என்ன?
Squawk 7500 என்பது சர்வதேச விமானப் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் ஒரு ரகசிய குறியீடாகும். விமானம் யாரேனும் கடத்தல்காரர்களால் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டாலோ அல்லது கடத்தல் அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, விமானிகள் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அவசர தகவல் தெரிவிக்க இந்த குறியீட்டைப் பயன்படுத்துவர்.



