தமிழக அரசியல் வரலாற்றில் 1977 ஆண்டு மறக்க முடியாத திருப்புமுனைகள். 1972ல் திமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால், எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) உருவாக்கினார். 1977 தேர்தலில், ஊழல் எதிர்ப்பு வாதங்கள், எம்.ஜி.ஆர்-ன் திரை பிரபலம், மக்கள் மனதில் இருந்த நம்பிக்கையுடன் அதிமுக அமோக வெற்றிபெற்றது. புதிதாக ஆரம்பித்த ஒரு கட்சி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது இந்தியா முழுவதும் அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இவ்வெற்றி மூலம், ஒரு புதிய கட்சி – புதிய தலைமை – புதிய அறிமுகம் என்ற அரசியல் கலாசாரம் உருவானது. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக பதவியேற்றபோது, மக்கள் முதன்முறையாக ஒரு நடிகரை முழுமையாக அரசியலில் ஏற்றனர். அதன்பிறகு சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு எம்.ஜி.ஆரை போலவே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி மாற்றத்தை உருவாக்கியுள்ளார்.
இன்று காலை வெளியான ஆரம்ப வாக்கு எண்ணிக்கை நிலவரங்களில், திமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் பலர் தங்களது சொந்தத் தொகுதிகளில் தவெக வேட்பாளர்களிடம் பின்னடைவைச் சந்தித்து வந்தனர். குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தார்.
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் தான் ஆட்சி அமைக்கும் என்ற சூழல் நிலவுகிறது. 1967 முதல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சி அமைத்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
7வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதை கொண்டாடும் வகையில் தவெகவினர் பலரும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
Read more: முதுகுலத்தூர் தொகுதியை தக்க வைக்குமா திமுக..? ராஜகண்ணப்பனுக்கு ட்விஸ்ட்.. பரபர வாக்கு எண்ணிக்கை..!



