மும்பை கடற்கரை சாலையில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு சுமார் 75 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பயங்கர விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை கடற்கரை சாலையின் வடக்கு நோக்கிய வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த விபத்து நடந்தது. ஹாஜி அலி அருகே உள்ள லோட்டஸ் ஜெட்டி பகுதியில் அதிகாலை 5.20 மணியளவில் வளைவில் சென்றபோது கருப்பு நிற BMW கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பாலத்தின் சுவரை உடைத்த கார், கீழே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்தது. இந்த விபத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.
விபத்தில் காரை ஓட்டிச் சென்ற 21 வயது சனய் குஜ்ஜர், பின்பக்க இருக்கையில் இருந்த 19 வயது ஆதித்யா ஜகஸ்னியா மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முன்பக்க பயணிகள் இருக்கையில் சனய்க்கு அருகில் அமர்ந்திருந்த 20 வயது ஆதித்யா ஓஸ்வால் மட்டும் உயிர் தப்பினார். அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களும் காயமடைந்தவரும் ஜூஹுவில் உள்ள NMIMS கல்லூரியில் படித்து வந்தவர்கள். குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த இவர்கள் ஜூஹுவில் வாடகை வீட்டில் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்துள்ளனர். விபத்தில் சிக்கிய BMW கார் சனய் குஜ்ஜரின் தந்தை பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் குஜராத்தில் தொழில் செய்து வருகிறார்.
நால்வரும் தெற்கு மும்பையில் உள்ள மரைன் டிரைவ் பகுதிக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து நடந்ததாக டார்டியோ போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
கடற்கரை சாலையின் பிரதான வழித்தடத்தில் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 80 கிலோமீட்டர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் விபத்துக்குள்ளான BMW சுமார் 120 கி.மீ வேகத்தில் சென்றிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் காரின் உண்மையான வேகம் குறித்து விசாரணை முடிந்த பின்னரே உறுதி செய்ய முடியும்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேகம் மட்டுமின்றி, ஓட்டுநர் மது அருந்தியிருந்தாரா, காரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்துக்குள்ளான BMW காரை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து, தொழில்நுட்பக் கோளாறா அல்லது மனித தவறா என்பது குறித்தும் பரிசோதிக்க உள்ளனர்.
சாலையில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் விபத்தை நேரில் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், காரில் இருந்த 4 பேரையும் மீட்டு நாயர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சனய் குஜ்ஜர், ஆதித்யா ஜகஸ்னியா மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ஆதித்யா ஓஸ்வால் நாயர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். காலை 11.30 மணியளவில் அவரது குடும்பத்தினர் மருத்துவர்களின் ஆலோசனைக்கு மாறாக அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவர் பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலையில் பலத்த காயங்கள், பல இடங்களில் எலும்பு முறிவுகள், முகத்தில் காயங்கள் மற்றும் உட்புற உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓட்டுநர் சனய் குஜ்ஜர் மது அருந்தியிருந்தாரா என்பதை பிரேதப் பரிசோதனை மற்றும் அதனுடன் தொடர்புடைய மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறிய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக டார்டியோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் குஜராத்தில் இருந்து மும்பைக்கு வந்துகொண்டிருந்த நிலையில், அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நாயர் மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனை மையம் அருகே காத்திருந்தனர்.
Also Read: 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி.. வெளியான அதிர்ச்சி தகவல்!


