பாட்டி வீட்டுக்குச் செல்ல சிறுவன் திடீரென மறுப்பு தெரிவித்தது, குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தாய் விசாரித்தபோது, கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக கூறப்படும் அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தில் 12 வயது சிறுவனின் தாய்வழிப் பாட்டியை ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவனின் பெற்றோர் சமையல் ஆர்டர்கள் எடுத்து செய்து வருகின்றனர். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் வேலைப்பளு அதிகமாக இருப்பதால், அந்த நேரங்களில் மகனை லக்காபுரத்தில் உள்ள பாட்டி வீட்டில் விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 12-ம் தேதி சிறுவனை மீண்டும் பாட்டி வீட்டுக்குச் செல்லுமாறு பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால், அங்கு செல்லக்கூடாது என சிறுவன் கடுமையாக மறுத்ததுடன், பதற்றத்துடனும் காணப்பட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த தாய், மகனிடம் தனியாக விசாரித்துள்ளார்.
அப்போது, தான் 6-ம் வகுப்பு படித்த காலத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பாட்டி பாலியல் தொல்லை அளித்து வந்ததாக சிறுவன் தனது தாயிடம் தெரிவித்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், தனது தாயின் வீட்டுக்குச் சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுவனின் தாய் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார் விசாரணை நடத்தி, சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள அவரது பாட்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சிறுவனின் பாதுகாப்பு மற்றும் இந்த புகார் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை.. போருக்கு தயார் நிலையில் ஈரான்! 7 நிபந்தனைகளால் பரபரப்பு…



