கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பாரதிபுரம் பகுதியில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மே 22ஆம் தேதி காணாமல் போன சிறுமி, மறுநாள் மே 23ஆம் தேதி குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கார்த்தி என்ற நபரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தை தெரிந்து மறைத்ததாக அவரது நண்பர் மோகன்ராஜும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்ட முறையும், அதனைச் சுற்றியுள்ள குடும்ப முரண்பாடுகளும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தாய், தனது கணவர் குடும்பத்தினர் தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் உடலை தகனம் செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
சம்பவம் குறித்து சிறுமியின் தாய் அளித்த பேட்டியில், தனது கணவர் மதுவை குளிர்பானத்தில் கலந்து வைத்துள்ளார், அது தெரியாமல் அருந்தியதால் மயக்க நிலைக்கு சென்றேன். அந்த நேரத்தில் தனது மகள் காணாமல் போனதாக அவர் கூறினார். மேலும், இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கார்த்தி தனது பக்கத்து வீட்டில் வசிப்பவர் என்றும், அவர் குழந்தைகளுடன் நன்றாக பழகியவர் என்றும் கூறியுள்ளார். “நான் அந்த வீட்டுக்கு சென்று ஒரு மாதம் தான் ஆகிறது.
கார்த்தியின் குழந்தைகளும் என் மகளும் ஒன்றாக விளையாடுவார்கள்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாயின் தகாத உறவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அது எல்லாத்துக்கும் தெரியும். 3 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. அதை ஏன் இப்போது பேசுகிறார்கள். எனக்கு திருமணமாகி 13 ஆண்டுகளாகிறது. அதில் ஓராண்டு மட்டுமே கணவனை விட்டு பிரிந்திருந்தேன்.
எனக்கு வேன் ஓட்டுநர் ஒருவருடன் தொடர்பு இருந்தது. பக்கத்து வீட்டில் வசித்தவர். என்னுடைய செயின் எல்லாம் அடகு வைத்து கொடுத்திருந்தேன். பிரச்னை எல்லாம் வந்தது. போலீஸ் ஸ்டேஷன் வரை பிரச்னை சென்று முடிவுக்கு வந்தது. அதன்பிறகு நான் தனியாக என் பெரியம்மா வீட்டில் இருந்தேன். என் கணவர் தேடி வந்து மீண்டும் குடும்பம் நடத்த அழைத்து சென்றார்” என சிறுமியின் தாய் கூறினார்.



