பெங்களூருவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்ட பெண், தனது 4 வயது மகனையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பெண்ணையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு சிக்கபனவரா பகுதியைச் சேர்ந்தவர் அபிநந்தன் (36). இவரது மனைவி ஹரிணி (26). இவர்களுக்கு யதுவீர் என்ற 4 வயது மகன் இருந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஜனவரி மாதம் ஹரிணி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் குடும்பத்தினர் அவரை சமரசம் செய்து மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்துள்ளனர்.
இதற்கிடையில், சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய ஹரிணி, புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போவதாக கடிதம் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் உறவினர்கள் அவரை மீண்டும் அழைத்து வந்து குடும்பத்துடன் சேர்த்துள்ளனர்.
இந்த சூழலில் சமூக வலைதளம் மூலம் ஹாரோஹள்ளியைச் சேர்ந்த தொழிற்சாலை ஊழியரான வினய் குமாருடன் ஹரிணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அபிநந்தனை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திட்டமிட்டபடி சம்பவத்தன்று இரவு சுமார் 10 மணியளவில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஹரிணி செயலிழக்கச் செய்துள்ளார். பின்னர் தனது செல்போனை அணைத்துவிட்டு, வெளியே காத்திருந்த வினய் குமாரை வீட்டிற்குள் அழைத்துள்ளார்.
அப்போது குளியலறையில் இருந்த அபிநந்தனை இருவரும் தாக்கியுள்ளனர். இதில் வினய் குமார் அவரது கழுத்தை நெரித்ததாகவும், ஹரிணி தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் அபிநந்தன் உயிரிழந்துள்ளார்.
தந்தை தாக்கப்படுவதை பார்த்த 4 வயது சிறுவன் யதுவீர் சத்தமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தங்களது திட்டம் வெளியில் தெரிந்துவிடும் என அஞ்சிய இருவரும், சிறுவனையும் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் வீட்டில் இருந்த தடயங்களை அழிக்க முயன்ற இருவரும், ரத்தக் கறைகளை சுத்தம் செய்துள்ளனர். மேலும் ஹரிணி தனது செல்போனில் இருந்த சில அழைப்புகள் மற்றும் தகவல்களை அழித்ததாகவும் கூறப்படுகிறது.
மறுநாள் காலை சுமார் 7 மணியளவில், கணவரும் மகனும் வீட்டில் மயங்கிக் கிடப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த ஹரிணி, தனக்கு எதுவும் தெரியாதது போல் நடந்துகொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டில் கதவு உடைக்கப்படாததையும், சிசிடிவி கேமராக்கள் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததையும் கவனித்துள்ளனர். இதனால் ஹரிணி மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கொலைக்கான பின்னணி மற்றும் வினய் குமாரின் தொடர்பு குறித்து தகவல்கள் வெளியாகியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஹரிணியையும் வினய் குமாரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் நாகேஷ் டி.எல். கூறுகையில், முதலில் அபிநந்தனை மட்டும் கொலை செய்ய திட்டமிட்டதாகவும், ஆனால் சிறுவன் சம்பவத்தை பார்த்ததால் அவனையும் கொலை செய்ததாகவும் தெரிவித்தார். கள்ளக்காதல் மற்றும் சொத்து தொடர்பான காரணங்களே இந்த இரட்டைக் கொலைக்கு பின்னணியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
Also Read: “இனி இந்தத் தப்பை பண்ண மாட்டேன்”… சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் மீண்டும் மன்னிப்பு கேட்ட பொன்முடி!



