2026-ல் அதிமுக ஆட்சியில் மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் நேற்று ராசிபுரத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி: ஜூலை 7-ம் தேதி நான் எழுச்சிப் பயணம் தொடங்கினேன். இன்று 154-வது தொகுதியாக ராசிபுரத்தில் உங்களை சந்திக்கிறேன். முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியது போன்று, ஒரு மணி நேரம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்து சேர்ந்திருக்கிறேன். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின், சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸில் இபிஎஸ் கிளம்பி விட்டார் என்கிறார்.
ஸ்டாலின் அவர்களே… நான் பஸ்ஸை எடுத்ததில் இருந்து உங்களுக்கு தூக்கம் போய்விட்டது. பிங்க் கலர் பஸ்ஸில் வந்து என்னை முந்திச் செல்வேன் என்று உதயநிதி பேசுகிறார். அது எப்படிப்பட்ட பஸ்..? மழை பெய்தால் ஒழுகுகிறது, மேற்கூரை காற்றில் பறக்கிறது, டயர் கழன்று கொண்டு ஓடுகிறது, சென்னையில் ஒரு பெண் அமர்ந்து இருந்த போது ஃபுட் போர்டு உடைந்தது. அப்படிப்பட்ட பேருந்தில் பயணம் செய்துவந்து நம்மைப் பிடிக்கிறாராம். உதயநிதி அவர்களே… 2026 அல்ல, 2031 அல்ல, 2036-லும் பிங்க் கலர் பஸ்ஸில் வந்து எங்கள் பேருந்தை நெருங்க முடியாது. இந்த பஸ் ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. பிங்க் கலர் பேருந்து என்ன நிலையில் இருக்கிறதோ, அதே கண்டிஷனில்தான் திமுக இருக்கிறது.
“தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால், ஏற்கெனவே திமுகவால் தமிழகம் தலைகுனிந்துவிட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கருணாநிதி குடும்பத்தினர் இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்துவிட்டனர். கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தனர். திமுக மத்திய அமைச்சர்களால் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது.
இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் உள்ளன என்றாலும் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசு. ஊழலின் ஊற்றுக்கண் திமுக. எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்கவில்லை. சீர்காழி மருத்துவமனையில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்திற்குச் சேர்ந்தனர். 27 கர்ப்பிணிப் பெண்களுக்கு தவறான ஊசி செலுத்தப்பட்டு சிக்கலாகியுள்ளது. மாரத்தான் அமைச்சர் ஓடிக்கொண்டே இருக்கிறாரே தவிர, அரசு மருத்துவமனைகளை கவனிப்பதே இல்லை என்றார்.
மதுரையில் மேயரின் கணவரை கைது செய்துள்ளனர், 5 மண்டலக் குழு தலைவர், 2 நிலைக் குழு தலைவர் ராஜினாமா செய்துள்ளனர். திமுக ஆட்சியில் திமுக அரசே முறைகேடு நடைபெற்றதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது. காஞ்சிபுரத்திலும், நெல்லையிலும், கோவையிலும் திமுக கவுன்சிலர்களுக்கும் மேயருக்கும் பங்கு பிரிப்பதில் சண்டை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இவை எல்லாமே முழுமையாக விசாரிக்கப் படும். கொள்ளையடித்த பணத்தை இவர்களிடம் இருந்து வசூல் செய்வதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏழை, விவசாய தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். அருந்ததியர் மக்கள், ஆதி திராவிடர் மக்கள் அதிகம் வசிக்கின்றனர், அவர்கள் திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் செல்கிறார்கள், அவர்களுக்கு வீட்டு மனை இல்லை, வீடு இல்லை என்று கோரிக்கை வந்திருக்கிறது. அவர்களுக்கும் இடம் வாங்கி வீடு கட்டிக் கொடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும் என்றார்.