தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது..
சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. இதன் மூலம் தவெக அரசின் ஆதரவு எண்ணிக்கை 144ஆக உயர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு தப்பியது..
அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி அணி தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் அதிமுகவில் பெரும் பூகம்படம் வெடித்தது.. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு 22 எம்.எல்.ஏக்களின் ஆதரவும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு 25 எம்.எல்.ஏக்களீன் ஆதரவும் இருந்தது.. இதையடுத்து 29 பேரின் கட்சி பொறுப்புகளையும் பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.. மேலும் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்திருந்தார்..
இதனிடையே தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த எஸ்.பி.வேலுமணி தரப்பு ஏமாற்றத்தையே சந்தித்தது.. அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடையாது என்று தவெக கூறிவிட்டது.. எனினும் அமைச்சர் பதவி என்று நாங்கள் கூறவில்லை, ஆதரவு மட்டுமே வழங்குவதாக கூறினோம் என்று சமாளித்துவிட்டது..
இந்த சூழலில் நேற்று எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 5 எம்.எல்.ஏக்கள் இபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டனர்.. மேலும் 3 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டனர்.. இந்த ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் நேற்றே அறிவித்திருந்தார்.
விஜய் தலைமையிலான தவெக தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அதிமுக காட்டமாக விமர்சித்திருந்தது. மேலும் திமுகவும் குதிரை பேர அரசியலை கடுமையாக சாடியிருந்தது..
இந்த நிலையில்அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த 3 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்த நிலையில் இந்த 3 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதுதொடர்பான அறிவிப்பு சட்டப்பேரவை செயலக கெசட்டில் வெளியிடப்பட்டுள்ளது..
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில் தற்போது 4 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.. முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.. இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்ததால் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் மேலும் சில எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யவிருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
பொதுவாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடத்தியாக வேண்டும். அந்த வகையில் நவம்பர் மாதத்திற்குள் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : தவெகவின் அனைத்து வழிமுறைகளையும் ஆதரிக்க முடியாது.. காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பரபரப்பு பதிவு..!



