2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அரசியல் சூழலை தலைகீழாக மாற்றியுள்ளன. குறிப்பாக திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்றிருந்த அவர், அடுத்தடுத்த சுற்றுகளில் பின்தங்க தொடங்கி, இறுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் தோல்வியை சந்தித்தார்.
கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற மு.க. ஸ்டாலின், கடந்த முறை அதே தொகுதியிலிருந்து வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்றார். ஆனால் இந்த முறை அந்த கோட்டையே சரிந்துள்ளது. இது அரசியல் வட்டாரங்களிலும், திமுக ஆதரவாளர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தனது சொந்த தொகுதியான ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வியை சந்தித்தார். 54,246 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
அதே போல் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சொந்த தொகுதியான சாத்தூரில் தோல்வி அடைந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கடற்கரைராஜிடம் 5989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவர்களை தாண்டி முதலமைச்சர் வேட்பாளரான நாதக தலைவர் சீமான் டெபாசிட் கூடப் பெறாமல் தோல்வியைத் தழுவியுள்ளார்.
காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான், தவெக வேட்பாளர் பிரபுவிடம் தோல்வியை தழுவினார். பிரதான கட்சிகளின் தலைவர்கள் இந்த தேர்தலில் தனது சொந்த தொகுதியில் தோல்வி அடைந்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: விஜய் வருகையால் டெபாசிட்டை இழந்த நாதக.. மாநிலக் கட்சி அந்தஸ்தையும் இழக்கும் அபாயம்..!



