இஸ்ரோவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி பணம் வசூலித்த இளைஞரின் மோசடி, அவரது செல்போன் ஆய்வுக்குப் பிறகு மேலும் அதிர்ச்சியான திருப்பத்தை சந்தித்துள்ளது. வேலைக்காக அணுகிய பெண்களுடன் நெருக்கமாக பழகியதுடன், அவர்களின் ஆபாச வீடியோக்களையும் செல்போனில் வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈரண்ணா படிகர். டிப்ளமோ படித்த இவர், பெங்களூரில் உள்ள இஸ்ரோவில் அதிகாரியாக பணியாற்றுவது போன்ற போலியான அடையாளத்தை இன்ஸ்டாகிராமில் உருவாக்கினார். இஸ்ரோவில் வேலை தேடுபவர்கள் தன்னை தொடர்புகொள்ளலாம் என்ற வகையில் அந்தக் கணக்கை பயன்படுத்தினார்.
இதனை நம்பி பல இளைஞர்கள் அவரை அணுகினர். வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றார். வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பணம் கொடுத்தவர்கள், நீண்ட நாட்களாகியும் பணி கிடைக்காததால் பணத்தை திரும்பக் கேட்கத் தொடங்கினர்.
அதே நேரத்தில், வேலைவாய்ப்பை காரணமாக வைத்து 30-க்கும் மேற்பட்ட பெண்களுடனும் ஈரண்ணா தொடர்பில் இருந்துள்ளார். அவர்களிடம் இருந்தும் பணம் பெற்றதுடன், சில பெண்களுடன் நெருக்கமாக பழகியதாக விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.
பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயன்றபோது, ஈரண்ணா திடீரென தனது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கிவிட்டு செல்போன் எண்ணையும் மாற்றினார். இதனால் சந்தேகம் அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் ஈரண்ணாவை கைது செய்த போலீசார், அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது பல பெண்கள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் அதில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
பலரிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் பண நெருக்கடியில் சிக்கியதாகவும், அந்தப் பிரச்சினையை சமாளிக்க வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாகவும் விசாரணையில் ஈரண்ணா ஒப்புக்கொண்டுள்ளார்.
போலி இஸ்ரோ அதிகாரி என்ற அடையாளத்தை பயன்படுத்தி எவ்வளவு பணம் வசூலித்தார், இந்த மோசடியில் இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பெண்கள் தொடர்பான வீடியோக்களின் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: அபாய அளவைத் தாண்டிய ஆறுகள்… உத்தரப் பிரதேசத்தில் அதிகரிக்கும் வெள்ள அபாயம்!



