இன்ஸ்டாகிராமில் தொடங்கிய பழக்கம், காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. ஆனால், அதே சமூக வலைதளம் மூலம் மற்றொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு, காரைக்குடியில் மூன்று பெண்கள் நேருக்கு நேர் மோதும் அளவுக்குச் சென்றுள்ளது. இந்த மோதலில் இளம்பெண் மீது சாணிக் கரைசலை ஊற்றி, விளக்குமாற்றால் தாக்கியதாக எழுந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரத்தைச் சேர்ந்த அபிநயா, தேவகோட்டை அருகே உள்ள கல்லல் எழுமாபட்டி கிராமத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கவியரசனை சமூக வலைதளம் மூலம் சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக வளர்ந்ததைத் தொடர்ந்து திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களது வாழ்க்கையில் ஜெயஸ்ரீ என்ற பெண்ணின் அறிமுகம் வந்துள்ளது. காரைக்குடியைச் சேர்ந்த ஜெயஸ்ரீயுடன் கவியரசனுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாகப் பழகியதால், கவியரசன் தன்னைப் பிரிந்துவிட்டதாக அபிநயா கருதியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜெயஸ்ரீயை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக அபிநயா தனது சகோதரி அருணாதேவி மற்றும் தோழி பிரியாவுடன் சென்றுள்ளார். காரைக்குடியின் 100 அடி சாலையில் சந்தித்தபோது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையாகத் தொடங்கிய சந்திப்பு, பின்னர் மோதலாக மாறியுள்ளது. அப்போது அபிநயா உள்ளிட்ட மூவரும் ஜெயஸ்ரீ மீது சாணிக் கரைசலை ஊற்றி, விளக்குமாற்றால் தாக்கியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாலையில் பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதையடுத்து ஜெயஸ்ரீ காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அபிநயா, அருணாதேவி, பிரியா ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஒரு காதல் உறவில் ஏற்பட்ட பிரச்சினை, பொதுவெளியில் தாக்குதல் சம்பவமாக மாறியுள்ள நிலையில், கவியரசனுக்கு இதேபோல் இன்ஸ்டாகிராம் மூலம் வேறு பெண்களுடனும் தொடர்பு இருந்ததா, மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Also Read: காய்கறி வாங்கச் சென்ற தாய்.. 16-வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய 3 வயது குழந்தை..



