மதுரையில் நடைபெற்ற ‘தமிழ்நாடு வளர்கிறது’ என்ற முதலீட்டாளர் மாநாட்டில் கப்பல் கட்டுமானம், தோல் அல்லாத காலணி, மின்னணுவியல், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.36,660 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை மேலூரில் 278.26 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இங்கு முதலாவதாக தைவான் நாட்டை சேர்ந்த ‘பே ஹை’ குழுமம் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியை தொடங்க உள்ளது. இதன்மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக, அதிக பெண்கள் இதில் பயன் பெறுவார்கள். தமிழ்நாடு வளர்கிறது’ மாநாட்டில் கப்பல் கட்டுமானம், தோல் அல்லாத காலணி, மின்னணுவியல், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் முதலீடுகள் பெற ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஹுண்டாய் நிறுவனம் கப்பல்கட்டுமானத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. கப்பல் கட்டுமானத் துறையில் தமிழகத்தை முன்னிலைப்படுத்தும் இந்த முதலீடு, மற்ற நிறுவனங்களை ஊக்குவிப்பதோடு, உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்களையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கும். பொறியியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப தீர்வுகளில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எஸ்எஃப்ஓ டெக்னாலஜிஸ் நிறுவனம், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான விரிவாக்கத் திட்டத்தை தேனியில் மேற்கொள்ள உள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் ‘பயோ எனர்ஜி’ துறையில் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.36,660 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது என்றார்.



